Posts

Showing posts from February, 2021

உதிரா உயிர்

 அயர்வதற்காக, ஆதவன் அணைத்து வைக்கப்பட்ட மாலை நேரம். கசடுகள் காற்றில் மிதந்து வந்து, முகத்தில் ஒட்டிக் கொண்ட முகத்தோடு, கழுத்துப்பகுதியிலும், கம்புக்கூடு பகுதியிலும், வியர்வைகள் குவிந்து நிற்கும் ஆடையோடு, கரைகள் ஆக்கிரமித்திருக்கும் பாதணியோடு, அளவுக்கு மீறிய சுமையை பையில் நிரப்பிக் கொண்டு, வெகு நாட்களுக்கு பின்பு, தன் சொந்த ஊருக்குள் நுழைந்து, தேநீரகத்தில் ஒதுங்கினான் ஈயன்.  ஈரம் வற்றிய உதட்டுடன் நடந்து வந்தவன் "ண்ணா,  ரெண்டு வடை சட்னி வச்சி" என்று சப்தமாக கேட்டபடி, இரண்டு விரல்களை நிமிர்த்தி, மீதி மூன்றையும் அமர்த்தி சைகை காட்டினான். முன்பு, தன் நண்பர்களுடன் இணைந்து வந்து அமர்ந்து, வடை உண்டு கொண்டே, கதை பேசிய நாட்கள், கண் முன்னே கணப்பொழுது காட்சியளித்து கடந்தன. வடையை பற்களால் அரைத்தபடி, நினைவை செரித்துக் கொண்டிருந்தான். சட்டை பைக்குள் அமர்ந்திருக்கும், ஒவ்வொரு அணாவையும் அள்ளி குமித்து, தின்ற வடைக்கு சரிகட்டிய  தினங்கள் அனுமதி பெறாமலே ஈயனின் உதட்டினை விரியச் செய்தன. நண்பர்களிலே மிக வளர்ந்தவனாக இருந்த   சதரனிடம், பை வழித்து பணத்தை அனைவரும் இணைந்து அள்ளிக் கொட...