உதிரா உயிர்
அயர்வதற்காக, ஆதவன் அணைத்து வைக்கப்பட்ட மாலை நேரம்.
கசடுகள் காற்றில் மிதந்து வந்து, முகத்தில் ஒட்டிக் கொண்ட முகத்தோடு, கழுத்துப்பகுதியிலும், கம்புக்கூடு பகுதியிலும், வியர்வைகள் குவிந்து நிற்கும் ஆடையோடு, கரைகள் ஆக்கிரமித்திருக்கும் பாதணியோடு, அளவுக்கு மீறிய சுமையை பையில் நிரப்பிக் கொண்டு, வெகு நாட்களுக்கு பின்பு, தன் சொந்த ஊருக்குள் நுழைந்து, தேநீரகத்தில் ஒதுங்கினான் ஈயன்.
ஈரம் வற்றிய உதட்டுடன் நடந்து வந்தவன் "ண்ணா, ரெண்டு வடை சட்னி வச்சி" என்று சப்தமாக கேட்டபடி, இரண்டு விரல்களை நிமிர்த்தி, மீதி மூன்றையும் அமர்த்தி சைகை காட்டினான். முன்பு, தன் நண்பர்களுடன் இணைந்து வந்து அமர்ந்து, வடை உண்டு கொண்டே, கதை பேசிய நாட்கள், கண் முன்னே கணப்பொழுது காட்சியளித்து கடந்தன.
வடையை பற்களால் அரைத்தபடி, நினைவை செரித்துக் கொண்டிருந்தான். சட்டை பைக்குள் அமர்ந்திருக்கும், ஒவ்வொரு அணாவையும் அள்ளி குமித்து, தின்ற வடைக்கு சரிகட்டிய தினங்கள் அனுமதி பெறாமலே ஈயனின் உதட்டினை விரியச் செய்தன.
நண்பர்களிலே மிக வளர்ந்தவனாக இருந்த சதரனிடம், பை வழித்து பணத்தை அனைவரும் இணைந்து அள்ளிக் கொடுத்து மதுபானம் வாங்கி வர சொன்னது. அவன் தன் வலக்கரம் முழுவதையும் கயிறுகளால் சுற்றி, இடக்கரத்தில் காப்பு அணிந்து கொண்டு போய், மதுபானம் வாங்கி வந்தது. முள்ளு புதருக்குள் புகுந்து, அருந்தியது. ஐந்து மணிநேரம் கழித்து, ஐந்து பூமர்களை வாயில் மென்று விட்டு வீடு திரும்பியது. வீட்டிற்குள் நுழைந்ததும், கழிவறைக்குள் புகுந்து, டூத் பேஸ்ட் தேடி பிடித்து, உபயோகித்தது..துண்டு எடுத்து வராமலே குளித்தது. துண்டு கேட்டு, அன்னையிடம், "குளிக்க போறவேன், துண்டுவேட்டி எடுத்துட்டு போ முடியாத லே, உனக்கு தொண்டி வேலைக்கு ஆளொருத்தி வேணுமோ* என்று வசவு வாங்கியது. இதயத்தை இன்பமழையால் நனைத்தது.
இன்று ஆசை அணையும் வரை, வடைகளை வாங்கிட பணம் கைவசம் இருக்கிறது. அன்று அருகில் இருந்த நண்பர்களை, இன்று எப்படி கூட்டிச் சேர்ப்பது.
மதுபானக் குப்பிகள் திகட்ட திகட்ட பருகிட பணப்பலன் இருக்கிறது. உடற்பெலன் இருக்கிறது. வட்டமாய் அமர்ந்து, விருப்பப்பட்டவர்களையெலாலாம் வசைபாடி தீர்த்து, ஒருவர் தோளையொருவர் பற்றி நடந்து, மனம் மகிழ்ந்து நடனமாடிய நாட்கள் எண்ணத்தில் நுழைகிறது. அதைத்தாண்டி தனியறையில் அருந்த மனப்பெலன்தான் போதாது என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
*கையில பேட் இருக்கு, பாலு இல்லையே* என்ற பாடல் வரிகளை அங்கு வீற்றிருந்த ஒலிப்பெருக்கி துப்பியது.
தின்ற தட்டினை வாளிக்குள் போட்டுவிட்டு, கை கழுவ முற்பட்டான். கை கழுவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த தண்ணீரினை உடைய வாளியில், தண்ணீர் கோதுவதற்காக டம்ளர் இருக்கிறதா என்று எட்டி பார்த்தான். அவ்வாளியிலிருந்த நீர் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. டம்ளர் அச்சூழலின் மையத்தில் சிக்கி மூழ்கிக் கொண்டிருந்தது. ஈயன் விரைந்து அந்த டம்ளரை தீண்டினான். அது அவனை பிடித்து இழுத்து தன்னோடு கூட அழைத்து மூழ்கடித்தது.
வேர்களற்ற தாவரம் வேகமாய் நடந்து வருவது, ஈயனின் கண்களில் விழுந்தது. கழுத்தை திருப்பி, சுற்றி சுற்றி விழியில் விழும் பிம்பத்தை மாற்றினான். அவன் கண்களில் தென்பட்ட எந்த தாவரத்திற்கும் வேர்கள் இல்லை. அவை நடமாடும் திறனும் பெற்றிருந்தது. அனைத்து மரங்களின் உயரமும் சரிசமமாக இருந்தது. எம்மரத்திலும் பழங்களோ,பூக்களோ கூட தென்படவில்லை. இவைகளுக்கு இனப்பெருக்கம் இல்லை போலும் என்று நெஞ்சத்தில் வார்த்தை உதிர்த்தான்.
மயில் தோகை போல் இலைகளை விரித்து, அவனருகில் நெருங்கி வந்து, அவனை நுகர்ந்தது. கரம் குலுக்குவதற்காக கிளையொன்றை நீட்டியது.தயங்கி தயங்கி கரம் கொடுத்தான்.இலைகளை காற்றில் அசைத்து, உதிரா உயிருக்கு தங்களை வரவேற்கிறோம் என்று வார்த்தை சமைத்தது. இம்மரம், காற்றை எவ்வளவு அழகாக கையாண்டு வார்த்தை உருவாக்குகிறது என்ற கேள்வியுடன் மெய்சிலிர்த்து வாய் புதைத்து நின்றான்.
அவனை தன் கிளைகளில் சுமந்து கொண்டு, மனிதர்கள் உலவும் நகருக்கு நகர்ந்து சென்றது.
சூரியனின் வெப்பம் யாரின் முகத்தையும் சுழிக்கும் படி செய்யவில்லை. குளிர் யாரையும் சலிக்கச் செய்யவில்லை.
தூரத்தில் மனிதர்கள் விளையாடிக் கொண்டிருப்பது, ஈயனின் விழிகளில் புலப்பட்டது.அவர்கள் உடல்களில் துணிகளை சுமக்கவில்லை. ஆண், பெண் வேற்றுமை அறிய இயலவில்லை. இனப்பெருக்க உறுப்பு யாதொருவருக்கும் இல்லை. இப்படித்தான் இருக்கும் என்பது யாவருக்கும் தெரிந்திருந்தாலும், யாவரும் மறைக்கும், இனப்பெருக்க உறுப்புக்காகத்தானே உடை. அந்த உடலின் மீது போர்த்தியிருந்தால் என்ன? மூடாதிருந்தால் என்ன? என்று தன் மனதில் ஈயன் நினைத்துக் கொண்டான்.
முகங்கள் மட்டுமே மாறுபட்டு இருந்தது. உயரங்கள் யாவருக்கும் சமமாகவே இருந்தது.
புதிதாக வந்தவனை புன்னகைத்து வரவேற்றனர். அவன் அணிந்திருந்த ஆடையை விசித்திரமாக பார்த்தனர்.சட்டென அவிழ்த்தனர். இனப்பெருக்க உறுப்பை ஆச்சரியமாக பார்த்தனர்.
அங்கு வசிப்பவர்களில் தனித்துவமானவனாக ஈயன் காட்சியளிக்கப்பட்டான்.
ஈயன் அவர்களோடு வசிக்கத் துவங்கினான். அந்நிலத்தின் குணத்தையும், அம்மக்களின் தன்மையும் சிறிது சிறிதாக அவனுக்கு தெரிய ஆரம்பித்தது.
அங்கு இரவு என்பது கிடையாது.அவர்களுக்கு உறக்கம் என்பதே கிடையாது. சோர்வு என்று ஒன்று இருக்கிறதை, அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவர்களின் உடலுக்கு பசியெனும் உணர்வு படைக்கப்படவில்லை. எந்த தாவரமும் ஒளிச்சேர்க்கையும், மகரந்த சேர்க்கையும் நிகழ்த்துவதில்லை. எந்த உயிரினாலும் தன் இனத்தை பெருக்க இயலாது. எந்த உயிருக்கும் வயது முதிர்வது நிகழாது. எந்த உயிரும் உடலை விட்டு உருவப்படாது.
அவர்கள் விதைப்பதில்லை.அறுப்பதில்லை.அவர்களுக்கு ஆகாரம் வேண்டுவதில்லை.நாளைக்கான தேவையை யார் சந்திப்பார் என்று ஓடுவதில்லை.
சமுத்திரம் அங்கே காணப்படவில்லை. மீன்களும் நிலத்தில் சஞ்சரித்தன.
பறவைகளின் இறக்கைகளில் ஏறி, கிரகங்கள் பற்றி அவ்வப்போது ஆராய்வார்கள்.
அவர்கள் நம்மைப்போல் அனிச்சை செயலாக சுவாசிப்பதில்லை.காற்று அவர்கள் உயிர்வாழ தேவையும் இல்லை.
கவி சமைத்து, பாடல் இசைப்பார்கள். பாடிய பாடலுக்கு இசை அமைப்பார்கள். அங்கே தங்கங்கள் கற்கலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. பறவைகளையும், விலங்குகளையும், தாவரங்களையும் சேர்த்தே விளையாடுகின்றனர். நோய்களை சந்திக்காத உடல்களை உடையவர்களாயிருந்தனர்.
அங்கு பிறப்பும் இல்லை.இறப்பும் இல்லை.பாலக பருவமும் இல்லை.முதுமை பருவமும் இல்லை.
உணவில்லா ஊருக்குள், உணவு தேவைப்படா ஊர் மக்களுக்குள், உணவை தேடி அலைந்தான் ஈயன்.ஒன்றும் கிட்டவில்லை.தண்ணீரும் அருந்தவில்லை.தனையறியாமல் மயங்கி விழுந்தான்.
தேநீர் கடையில் இருந்தவர்கள் அவனை நிமிர்த்தி வைத்து முகத்தில் நீர் தெளித்தனர்.அப்பொழுது தான் மயக்கம் தெளிந்தான். சிறிதாக மனம் வாடினாலே, மயங்கி விழும் வியாதி அவனுக்குள் இருப்பது அப்பொழுதுதான் அவனுக்கு தெரிந்தது. கை கழுவ வந்த இடத்தில் மயங்கி கனா கண்டுள்ளான்.
ஆயினும் அந்த *உதிரா உயிர்* நகரம் அவன் மனதின் ஆழத்துள் பதிந்தது. பசியற்ற, தாகமற்ற, ஆண்-பெண் பாலின வேறுபாடற்ற கடவுளர்கள் வசிக்கும் பகுதி இப்படித்தான் இருக்கும் போலும், இப்படித்தான் அவர்கள் நேரத்தை செலவழிப்பார்கள் போலும் என்று தன் உள்ளத்தில் எண்ணிக் கொண்டான்.
அருமை.... நல்லதோர் கற்பனை...
ReplyDelete